தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து இன்று முதல் சோதனை!

பாரத் பையோடெக் எனும் இந்திய நிறுவனம் தயாரித்துள்ள ‛கோவாக்சின்’ கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை, தமிழகத்தில் இன்று தொடங்குகிறது.
ஐதராபாத்தில் செயல்படும், ‘பாரத் பயோடெக்’ நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து மனிதர்களுக்கான சோதனையில் ஈடுபட்டுள்ளது. தமிழகம், டில்லி, பீஹார், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, உ.பி., உள்ளி்ட 12 இடங்களில் மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை அளித்து, பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
அந்த வகையில் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்கொளத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை நடத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அங்கு 100 தன்னார்வலர்களுக்கு மருந்தை செலுத்தி, பரிசோதனை செய்ய உள்ளனர்.
முதல் கட்டமாக இன்று சிறிய அளவிலான டோசேஜ் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு, 14 நாட்கள் அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். பக்கவிளைவுகள் ஏதும் நிகழவில்லை என்றால் அடுத்த கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.