‘இங்கிலீஸ் பேச்சு, அழகு மட்டும் அரசியலுக்கு போதுமா?’ ராஜஸ்தான் முதல்வர் கேலி

‘ஆங்கில பேசி, பார்க்க அழகாக இருப்பது மட்டும் அரசியலுக்குப் போதாது. நாட்டுக்காக உன் இதயத்தில் என்ன உள்ளது என்பதுதான் முக்கியம்’ என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட், சச்சின் பைலட்டை கடுமையாக சாடியுள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெஹ்லட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், தனக்கு முதல்வர் பதவி தரவில்லை என்ற கோபத்தில், ஆட்சியை கலைக்கும் சதி வேலையில் ஈடுபட்டார். இதையடுத்து, சச்சின் பைலட், துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், சச்சின் பைலட் குறித்து பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லட், “ எம்.எல்.ஏ.க்களை விலைபேசும் முயற்சி நடந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. சதியில் ஈடுபட்டவர்களின் விளக்கத்தை எப்படி நம்ப முடியும்? ராஜ்யசபா தேர்தலின் போதும் பாஜக இதே வேலையை செய்தது. அதனால்தான் எம்.எல்.ஏ.க்கள் 10 நாட்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதனை நாங்கள் செய்திருக்காவிட்டால், மத்திய பிரதேசத்தில் நடந்ததுதான் இங்கும் நடந்திருக்கும். சச்சின் பைலட் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்கப் பார்த்தார்.
நல்ல ஆங்கிலம், பார்க்க அழகாக இருப்பது, அருமையாகப் பேசுவது என்பது மட்டுமே அரசியலுக்குப் போதாது. நாட்டுக்காக உன் இதயத்தில் என்ன உள்ளது என்பதுதான் முக்கியம். உன்னுடைய அகத்தின் அழகு என்ன? உங்கள் கொள்கை, கருத்தியல், அர்ப்பணிப்புதான் அரசியலில் பேசும். இதை வைத்தே மற்ற விஷயங்களும் பார்க்கப்படும்” என்று கடுமையாக சாடினார் அசோக் கெலாட்.