இங்கிலாந்து பிரதமரின் தந்தை பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்ததால் பரபரப்பு!!
![](https://thambattam.com/storage/2021/01/202101012212596728_Tamil_News_Tamil-News-Brexit-Boris-Johnsons-father-applies-for-French_MEDVPF.jpg)
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது
2016-ம் ஆண்டு அங்கு நடந்த பொதுவாக்கெடுப்பில் உறுதியானது. ஆனால் அந்தமுடிவில் இருந்த சில நடைமுறை சிக்கலால் இழுபறி நிலவியது. இறுதியில்
கடந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்துவெளியேறியது. ஆனாலும், ஐரோப்பிய யூனியனுடன் இங்கிலாந்தின் வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டது.
இந்த பிரச்சனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்வு எட்டப்பட்டது. இதன் மூலம் ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு சட்டமாக்கப்பட்டது.
இதையடுத்து, ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இங்கிலாந்து நேற்று
அதிகாரப்பூர்வமாக விலகியது. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகியதையடுத்து, இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் இனி ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பெற்றுவந்த
சலுகைகள் முடிவுக்கு வந்துள்ளது. பயண சலுகைகளும் முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தவர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். இவர் பழமைவாத கட்சியை சேர்ந்தவர்.
போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டன்லி
ஜான்சனும் இதே பழமைவாத கட்சியை சேர்ந்தவர் தான். ஆனால், ஸ்டன்லி
ஜான்சனுக்கு இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதில் விருப்பம் இல்லை. 2016-ம் ஆண்டு நடந்த வாக்கெடுப்பிலும் இவர் பிரேக்ஸிட்டுக்கு
எதிராகவே வாக்களித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ஐரோப்பிய
யூனியனில் இருந்து இங்கிலாந்து முழுவதும் விலகியுள்ள நிலையில் போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டன்லி ஜான்சன் பிரான்ஸ் குடியுரிமைக்கு
விண்ணப்பித்துள்ளார்.
தான் ஐரோப்பிய யூனியன் நாடான பிரான்ஸ் நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பித்தது தொடர்பாக 80 வயது நிரம்பிய ஸ்டன்லி ஜான்சன் கூறியதாவது:-
இது பிரெஞ்சு குடிமகனாவதற்காக செய்யப்பட்டது அல்ல. இது ஏற்கனவே நாம் யார் என்பதை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை. எனது தாய் பிரான்சில் பிறந்தவர். நான் எப்போதும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்தவன் தான்.
என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து பிரிந்து செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பிரதமர் போரிஸ் ஜான்சன். ஆனால், தற்போது பிரதமர் ஜான்சனின் தந்தையே
ஐரோப்பிய நாடான பிரான்சில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ள நிகழ்வு ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.