முதன்முறையாக கேரளாவின் ஒரு கோயிலில் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமனம்!!

கேரளாவில் முதல் முறையாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட கோயிலில் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேரள மாநிலத்தில் 1,200க்கும் மேற்பட்ட கோயில்களை நிர்வகித்து வருகிறது. இந்த கோயில்களில் பட்டியலினத்தை சேர்ந்த 19 பேரை அர்ச்சகராக நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்தது. இதன்படி வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக பட்டியலினத்தைச் சேர்ந்த 18 பேரும், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தாங்கள் நியமிக்கப்பட்ட கோயில்களில் பகுதி நேர அர்ச்சகர்களாக செயல்படுவார்கள்.
இதற்கு முன் பழங்குடியினத்திலிருந்து இதுவரை யாரும் கோயில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதில்லை. முதல் முறையாக இப்போதுதான் கோயில் அர்ச்சகராக பழங்குடியினத்திலிருந்து ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தேவஸம்போர்டு அமைச்சர் கூறுகையில், “கேரள வரலாற்றிலேயே முதல் முறையாக, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருவிதாங்கூர் தேவஸ்தானம் அர்ச்சகராக நியமித்துள்ளது. பட்டியலினம், பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் பகுதி நேர அர்ச்சகர்களாக சிறப்புப் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் தேர்வு எழுதியதில் போதுமான அளவு பட்டியலினம், பழங்குடியினத்திலிருந்து தேர்ச்சி அடையவில்லை.
இதையடுத்துச் சிறப்புத் தரவரிசை உருவாக்கப்பட்டு அவர்கள் பட்டியலிடப்பட்டு பகுதி நேரமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி பழங்குடியினப் பிரிவினருக்கு 4 காலியிடம் அறிவிக்கப்பட்டதில் ஒருவர் மட்டுமே விண்ணப்பித்திருந்தார். அதனால் அவருக்கு மட்டும் பணி உத்தரவு வழங்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.