விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன்!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்து வரும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன், கடந்த ஒரு மாத காலமாக பரோலில் வெளியே வந்து வீட்டில் உள்ளார். அவருக்கு மேலும் இரண்டு வாரம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார். சனிக்கிழமை காலை ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட அவர், விழுப்புரம் நேருஜி சாலை, காந்தி சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் தியாகராஜன், ரவிச்சந்திரன் ஆகிய சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஏற்கனவே அவர் புழல் சிறையில் இருந்தபோது அரசு மருத்துவர்களாக இருந்த இவர்கள் சிறுநீரகம், தோல் நோய் தொடர்பாக தொடர் சிகிச்சை வழங்கியவர்கள் என்பதால், தற்போது வெளிவந்துள்ள நிலையில் விழுப்புரத்தில் உள்ள அந்த மருத்துவரின் மருத்துவமனையில், சிகிச்சை தொடர்வதற்காக பேரறிவாளன் சனிக்கிழமை வந்துள்ளார்.
ஆயுள் தண்டனை கைதி மருத்துவமனைக்கு வந்துள்ளதால், அந்த மருத்துவமனையை சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.