‘பாபர் மசூதி இடிப்புடன் எனக்கு தொடர்பில்லை’ முன்னாள் உத்தரபிரதேச முதல்வர் மறுப்பு

“பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் சுமத்தியது. நான் நிரபராதி” என உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச முதல்வராக இருந்தவர் கல்யாண் சிங். தற்போது, 88 வயதாகிறது. சமீபத்தில், பா.ஜ.க கட்சியில் இணைந்தார். இவர், 1992-இல் உத்தரபிரதேச முதல்வராக இருந்தபோதுதான், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கல்யாண்சிங் மற்றும் பா.ஜ.கவின் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீதும் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. 32 பேர் குற்றவாளிகளாக சி.பி.ஐ. சேர்த்துள்ளது.
சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிற பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், கல்யாண்சிங்கிற்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணையில் அவர் கூறியது: “பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்த போது உபி. மாநில முதல்வர் என்ற முறையில், பாபர் மசூதிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போட உத்தரவிட்டேன். அது இடிக்கப்பட்டதற்கு நான் பொறுப்பல். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, காங்கிரஸ் என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி பெய்யாக எனது பெயரை வழக்கில் சேர்த்துள்ளது. நான் நிரபராதி.” என்று தெரிவித்தார்.