தமிழகத்தில் 19-ந்தேதி முதல் பள்ளிகள் தொடக்கம்..
பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 19-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது.
தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. இதில் சில பள்ளிகள் நேற்று அரசு அறிவிப்பு வெளியான உடனே, தங்களுடைய பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளன.
ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் என்பதால், கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும். அந்தவகையில் தேவைக்கேற்ற படி வகுப்பறைகளை ஒதுக்கி அவற்றை கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யும் பணிகளில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டது.மேலும் மாணவர்கள் தங்களுடைய கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதற்கு ஏதுவாக ஆங்காங்கே கிருமிநாசினி திரவம் வைக்கும் முயற்சியும் சில பள்ளிகள் செய்கிறது.
ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு எந்த மாதிரி பாடப்பிரிவுகள் ஒதுக்கி வகுப்புகளை நடத்துவது? என்பது பற்றியும் சில பள்ளிகள் ஆலோசனை நடத்தி அதற்கான பாடவேளைகளையும் இப்போதே திட்டமிட்டு விட்டது. அதன் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்பட இருக்கிறது. தேவைப்படும் பட்சத்தில் மரத்துக்கு அடியில் அமர்ந்து காற்றோட்டமான முறையில் வகுப்புகளை நடத்துவதற்கு ஏதுவாகவும் முன்னேற்பாடுகளை பள்ளிகள் செய்து வருகிறது.
மேலும், மாணவ-மாணவிகள் வகுப்பறையை தாண்டி பள்ளி வளாகத்தில் எந்த இடத்திலேயும் கூட்டமாக ஒன்று கூடி விடாதபடி, அதனை கண்காணிக்க ஆசிரியர்கள் தலைமையில் சில குழுக்களும் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் குழுவினர் பாட இடைவேளை நேரங்களில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் கூட்டமாக உலாவுவதை தடுக்க தீவிரமாக கண்காணிக்க இருக்கின்றனர்.