முன்னாள் அதிபருக்கு தண்டனை தென்கொரிய கோர்ட் உறுதி
ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் பார்க் மீதான 20 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து, தென் கொரிய உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
தென் கொரியாவில் அதிபராக பதவி வகித்தவர் பார்க் கியூன் ஹை. இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2017ல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரது பதவி பறிக்கப்பட்டது.
கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட முதல் பெண் அதிபர் என்ற பெயர் பெற்ற பார்க், வேறு ஒரு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையும் சேர்த்து, மொத்தம் 22 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, பெரும் தொகையையும் அபராதமாக செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் அதிபராக பதவி வகித்த காலத்தில், சாம்சங் உள்ளிட்ட பிரபல தொழில் நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி லஞ்சம் வாங்கினார் என்பதும், உளவு அமைப்புகளின் பணத்தை சட்ட விரோதமாக தனக்கு பெற்றுக்கொண்டார் என்பதும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.