மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மேட்டூர் அனல் மின் நிலைய நுழைவாயில் முன்பு ஒப்பந்ததாரர் மாறியதையடுத்து மீண்டும் வேலை செய்ய அனுமதிக்க வேண்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூரில் நான்கு அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பழைய அனல் மின் நிலையம் உள்ளது. மேலும் இதன் அருகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையம் உள்ளது. இவைகள் மூலமாக தினசரி மொத்தம் 1,440 மெகாவாட் மின் உற்பத்தி எடுக்க படும். இதில் நிலக்கரி கையாளும் பிரிவு தொடங்கி மின் உற்பத்தி செய்யும் வரை 1,300 -க்கும் மேற்பட்ட நிரந்திர மற்றும் 700 -க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் என 2,000 -க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது 2013 -ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த ராதா இன்ஜினியரிங் கான்ராக்டரின் ஒப்பந்த காலம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் புதியதாக ஹரியானாவைச் சேர்ந்த ஓ.எஸ்.எம்., இன்ஜினியரிங் கான்ராக்டர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். இவரது தரப்பில் இன்னும் பணி தொடங்கா நிலையில் இதுவரை ஏற்கனவே பணியாற்றி வந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு
எவ்வித பாஸ் மற்றும் வேலை உத்திரவாதம் அளிக்கப் படவில்லை. மேலும் பழைய ஒப்பந்ததாரரிடம் தொழிலாளர்களுக்கு, கிராஜுவிட்டி உள்ளிட்ட பண பலன்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் பணிக்கு சென்ற ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய பாஸ் இல்லை எனக் கூறி அனல் நிலைய நிர்வாகம் தொழிலாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. இதனைத் தொடர்ந்து இன்று மேட்டூர் அனல் மின் நிலைய நுழைவாயில் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பழைய தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு மற்றும் நிலுவை பண பலன்கள் உள்ளிட்டவைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.