ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு : நார்வேயில் சோகம்..!
நார்வேயில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே பல நாடுகளில் ஃபைசர் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நார்வே நாட்டில் ஃபைசர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 23 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 13 பேரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் வயதானவர்கள் என்று குறிப்பிட்ட சுகாதாரத் துறையினர், தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் ஏற்படும் சாதாரண பக்க விளைவுகளைக்கூட அவர்களின் உடல்களால் தாங்க முடியவில்லை என்றும் இதன் காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
மேலும், தற்போது நார்வே நாட்டில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து ஃபைசர் நிறுவனமும் ஆய்வு செய்து வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 10 லட்சம் நபர்களில் 11.1 பேருக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் ஆபத்தான அளவு அதிகமாக இல்லை என்றும் இவை எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றும் ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைப்போல நெதர்லாந்த் இஸ்ரேல், பல்கேரியா போன்ற பல நாடுகளிலும் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.