‘பேஸ்புக்’ பயன்படுத்த தடை எதற்கு?: ராணுவ அதிகாரி மனு

ராணுவத்தில் பணிபுரிபவர்கள், ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ராணுவ அதிகாரி ஒருவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்திய ராணுவ வீரர்களுடன், எதிரி நாட்டை சேர்ந்தவர்கள் , சமூக ஊடகங்கள் மூலம் நட்பாக பழகி, பல தகவல்களை திருடுவதாக, புகார்கள் வந்தன. இதையடுத்து, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட, 89 சமூக ஊடக செயலிகளை பயன்படுத்த, ராணுவ வீரர்களுக்கு, சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை, ராணுவ உளவுத்துறை இயக்குனரகம் வெளியிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, லெஃப்டினன்ட் கர்னல், பி.கே.சவுத்ரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது:
குடும்பத்தை பிரிந்து, பல்லாயிரம் கிலோ மீட்டர் துாரத்தில், தனிமையில், ஆபத்து நிறைந்த பணியை மேற்கொள்ளும் ராணுவ வீரர்கள், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தகவல் பரிமாறி கொள்ள, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் பெரும் உதவியாக உள்ளன. அதற்கு தடை விதிப்பது, வீரர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். எனவே, இந்த உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.