இந்தியாவுக்கு விமான சேவை மீண்டும் துவக்குகிறது ரஷ்யா
கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவையை, மீண்டும் ரஷ்யா துவக்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியா, பின்லாந்து, வியட்நாம், கத்தார் ஆகிய நாடுகளுக்கு விமான போக்குவரத்தை துவக்குவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
‘இந்த நான்கு நாடுகளிலும் கொரோனா தொற்று கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 15 நாட்களில், ஒரு லட்சம் பேருக்கு, 40 பேருக்கும் குறைவானவர்களே, கொரோனாவால் இந்நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நான்கு நாடுகளின் தலைநகரங்களுக்கும், மாஸ்கோவில் இருந்து ஜன.,27 முதல் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தடுப்புக்கான அனைத்து நடைமுறைகளுடன் விமான போக்குவரத்து நடைபெறும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.