குப்பைக் கிடங்கு மையத்தில் காயங்களுடன் 6 வயது சிறுமி..

குப்பை கிடங்கு மையத்தில் இருந்து மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 வயது சிறுமி.
அவிநாசி அருகே சேவூர், தண்டுக்காரம்பாளையத்தில் உள்ள குப்பைக் கிடங்கு மையத்தில் உடலில் காயங்களுடன், மயக்க நிலையில் 6 வயது மதிக்கத்தக்க சிறுமியை ஒரு பெண் விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேவூர் அருகே தண்டுக்காரம்பாளையம் புளியம்பட்டி சாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு, வெள்ளிக்கிழமை மதியம், உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் 6 வயது மதிக்கத்தக்க சிறுமி படுத்துக்கிடந்துள்ளார்.
இதைப் பார்த்த பொதுமக்கள், சேவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுமியின் பெயர், முகவரி உள்ளிட்டவை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முதற்கட்டமாக குப்பைக் கிடங்கு அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு மேற்கொண்டதில், அதில் கண்ணாடி, முகக்கவசம் அணிந்த 35 வயது மிக்க ஒரு பெண் மதியம் அப்பகுதியில் நடந்து செல்வது தெரிய வந்தது.
இதேபோன்று, மதியம் குப்பைக் கிடங்கு மையத்தில் அதே பெண், சிறுமியை படுக்க வைத்துக் கொண்டிருந்ததையும் பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
இருப்பினும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி கண் விழித்தவுடன் மற்ற விபரங்கள் தெரிய வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குடும்பத் தகராறில் சிறுமி தாக்கப்பட்டு விட்டுச் செல்லப்பட்டாரா, சிறுமிக்கு ஏதேனும் விஷம் கொடுக்கப்பட்டதா அல்லது யாரேனும் கடத்தி வந்தார்களா என சேவூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால், அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.