அணு ஆயுத ஒப்பந்தம் ஈரான் மீண்டும் நம்பிக்கை
டிரம்ப் விலகிக்கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில், பிடன் தலைமையிலான அமெரிக்க அரசு மீண்டும் இணையும் என்று எதிர்பார்ப்பதாக, ஈரான் அதிபர் ருஹானி தெரிவித்துள்ளார்.
ஒபாமா அதிபராக இருந்தபோது, ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, ஈரான் அணு ஆயுதங்களை தயார் செய்யாது; அதற்கு பதிலாக, ஈரான் மீது சர்வதேச நாடுகள் விதித்த தடைகள் ஒவ்வொன்றாக நீக்கப்பட வேண்டும்.
ஆனால், அதிபராக பதவியேற்றதும், டிரம்ப் இந்த ஒப்பந்தம் செல்லாது; அமெரிக்கா விலகுகிறது என்று அறிவித்து விட்டார். ஈரானுடன் தொடர்ந்து மோதல் போக்கையே மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய அதிபர் பிடன், மீண்டும் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவார் என்று நம்புவதாக ஈரான் அதிபர் ருஹானி தெரிவித்துள்ளார்.
‘அமெரிக்கா ஒப்பந்தத்தில் இணைந்தால், நாங்களும் உறுதி அளித்தபடி நடந்து கொள்வோம்’ என்று ஈரான் தெரிவித்துள்ளது.