ஆம்ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை..

2016-ம் ஆண்டில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாவலரை தாக்கிய வழக்கில் ஆம்ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைமை பாதுகாவலர் ஆர்.எஸ்.ராவத், டில்லி போலீசிடம் அளித்த புகாரில், டில்லி, மாளவியா நகர் தொகுதி ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,வான சோம்நாத் பாரதி மற்றும் அவரது 300 ஆதரவாளர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்களிடம் தகராறு செய்ததாக கூறியிருந்தார். மேலும், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சுற்றுச்சுவர் வேலியை தகர்த்தது மட்டுமின்றி மருத்துவமனை ஊழியரையும் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் டில்லி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. அதில், சோம்நாத் பாரதி மீதான குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி எனவும், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 4 பேரை நிரபராதிகள் என்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.