பயிருக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்து வந்த வாலிபர் கைது!

கள்ளக்குறிச்சியில் பயிருக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் அண்மைக்காலமாக கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதிகளவில் கஞ்சா கடத்தப்பட்டு மாணவர்களை குறித்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அதனை ஒழிக்கும் பணியில் உள்ளனர்.
இந்நிலையில், மரவள்ளி கிழங்கு பயிர்களுக்கு இடையே கஞ்சாசெடி வளர்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே புதுக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் கண்ணன் இவர் தனது சொந்த நிலத்தில் 2 ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து பராமரித்து வந்தார். நீண்ட நாட்களாக விவசாயம் செய்து வரும் இவர், மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு நடுவே கஞ்சா செடியும் வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் மரவள்ளி கிழங்கு பயிர் சாகுபடி செய்யப்பட்ட இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அப்பயிர்களுக்கு இடையே 20 கஞ்சா செடிகள் வளர்த்து பராமரித்து வந்தது தெரியவந்தது. அவற்றை அழித்த போலீசார் கண்ணனை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். விவசாய பயிர்களுடன் கஞ்சா செடி வளர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.