பாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம்..? நாடு திரும்பிய இந்திய மூதாட்டி..
பாஸ்போர்ட் தொலைந்ததால் பாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்திய மூதாட்டி ஒருவர் விடுதலையாகி இந்தியா திரும்பியுள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம், அவுரங்காபாத்தை சேர்ந்தவர் ஹசினா பேகம், 65, என்பவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருக்கும் தனது கணவரின் உறவினர்களை பார்க்க சென்றுள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக தனது பாஸ்போர்ட்டை ஹசினா தொலைத்துவிட்டார்.
இதனால், இந்தியா திரும்ப முடியாமல் தவித்த அவரை, பாக்., அதிகாரிகள் வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்தனர். அவரை மீட்க இந்தியாவில் இருக்கும் உறவினர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பயனில்லாமல் போனது.
இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய கைதிகளை சமீபத்தில் பாகிஸ்தான் அரசு விடுவித்தது. இதனடிப்படையில், ஹசினா பேகமும் விடுதலை செய்யப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பினார். அவரை அவுரங்காபாத் போலீசார் மற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க வரவேற்றனர்.
இது குறித்து அவர் கூறியதாவது: கணவரின் உறவினரை பார்க்க பாக்., சென்றபோது என் பாஸ்போர்ட் தொலைந்ததால், என்னை சிறையில் அடைத்தனர். நான் அப்பாவி, என்னை விட்டுவிடுங்கள் என மன்றாடி கேட்டும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
நான் இப்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். கடந்த 18 ஆண்டுகளாக நான் பல்வேறு தடைகளையும், சோதனைகளையும் கடந்து வந்திருக்கிறேன். என்னை விடுதலை செய்வதற்காக முயற்சி எடுத்த என்னுடைய உறவினர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.