ஹாங்காங் மக்களுக்கு விசா பிரிட்டன் புதிய திட்டம்..?
ஹாங்காங்கில் இருந்து வருபவர்களுக்கு ஐந்தாண்டுக்கான விசா வழங்கும் திட்டத்தை, பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் அறிமுகம் செய்துள்ளார்.
ஹாங்காங்கை தன் வசம் வைத்திருக்கும் சீனா, அங்கு கெடுபிடி சட்டங்களை அமல் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. இதை இரும்புக்கரம் கொண்டு சீனா அடக்கி வருகிறது.
இந்நிலையில், சீன அரசின் அத்துமீறல்கள் பிடிக்காமல் ஹாங்காங்கில் இருந்து வருபவர்களுக்கு ஐந்து ஆண்டுக்கான விசா வழங்கும் திட்டத்தை பிரிட்டன் அறிவித்துள்ளது.
இதன்படி, முதல் ஐந்தாண்டுகள் விசா பெற்று பிரிட்டனில் வசிக்கும் ஹாங்காங் மக்கள், அதன்பிறகு பிரிட்டீஷ் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். ஹாங்காங் மக்களுக்கு அளித்த உறுதியை நிறைவேற்றும் வகையிலான திட்டத்தை அமல் செய்வதில் பெருமை அடைவதாக, பிரதமர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
சீனாவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன், ஹாங்காங் பிரிட்டீஷ் காலனி ஆட்சியின் கீழ் இருந்தது. அதை ஒப்படைக்கும்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை சீனா மீறுவதாக, பிரிட்டன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.