லிபியாவை விட்டு விடுங்க ஐ.நா., வேண்டுகோள்
போரில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுக்குழுவினர், உடனடியாக லிபியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று, ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்பிரிக்க நாடான லிபியாவில், அதிபர் கடாபி ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. நாட்டின் கிழக்குப்பகுதியில் ஒரு குழுவினர் அரசமைத்து ஆட்சி நடத்துகின்றனர். மேற்கு பகுதியில் இன்னொரு குழுவினர் அமைத்துள்ள அரசை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன.
இரு குழுவினருக்கும் வெவ்வேறு சர்வதேச நாடுகளும், போராளிக்குழுக்களும் ஆதரவு அளிக்கின்றனர். அந்தந்த நாடுகளின் படைகளும், இரு தரப்புக்கு ஆதரவாக போரில் இறங்கியுள்ளன.
இப்படி வெளிநாடுகளை சேர்ந்த படையினர் பலர், போரில் கலந்து கொண்டுள்ளதால், லிபிய பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த முடியவில்லை.
இது குறித்து ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டரெஸ், ‘லிபியாவை, அந்நாட்டினரிடம் விட்டு விடுங்கள். வெளிநாட்டுக் கூலிப் படையினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.