இன்னும் தீராத கொரோனா சிங்கப்பூர் பிரதமர் வேதனை
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை’ என்று, சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுாங் வேதனை தெரிவித்துள்ளார்.
‘ஒரு நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையான பேருக்கு தடுப்பூசி போடப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும்’ என்று டாவோஸ் உலக பொருளாதார அமைப்பின் உச்சி மாநாட்டில் இணையம் மூலமாக பேசிய அவர் குறிப்பிட்டார்.
‘கொரோனாவால் வரும் நாட்களில் சர்வதேச நாடுகளின் அரசுகள் பெரும் நிர்ப்பந்தத்தை சந்திக்க நேரிடும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் தொற்று இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டாக வேண்டிய காலம் இது.
பொருளாதாரத்தை சரி செய்வதற்காக உலக நாடுகள் பல்வேறு அசாதாரண முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இத்தகைய முயற்சிகள் நெடுங்காலத்திற்கு தொடர முடியாதவை. வருங்காலத்தில் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு நிலைக்கு அரசாங்கங்கள் தள்ளப்படும்’ என்றார் பிரதமர் லுாங்.