மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே..? சர்ச்சையில் சிக்கிய காவலர்கள்..?
அமெரிக்காவின் வெள்ளையின போலீசார் இனப்பாகுபாடு காட்டுவதாகவும் கருப்பின குற்றவாளிகளிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்வதாகவும் காலம் காலமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு. இதற்கு தோதாக தற்போது ஓர் சம்பவம் அரங்கேறி உள்ளது. இது அமெரிக்க வெள்ளை இன போலீசார் மீது கடுமையான விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் மினேசோட்டா மாகாணத்தில் கள்ளநோட்டு அடிக்கும் குற்றவாளி ஜார்ஜ் புளாயிட் அமெரிக்க வெள்ளையின போலீசாரால் மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து அமெரிக்காவின் பல மாகாணங்களில் கருப்பின அமைப்புகள் கிளர்ந்து எழுந்தன. கொரோனா வைரஸ் அமெரிக்காவை கோரதாண்டவம் ஆடிய நிலையில் ஜார்ஜ் புளாயிட் படுகொலை அமெரிக்காவில் பதற்றத்தை அதிகரித்தது. இந்த போராட்டத்தால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் அரசின்மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
உலகம் முழுவதும் பல நாட்டுத் தலைவர்கள் கருப்பின மக்கள் மீதான அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்தனர். பிளாக்லஃப் மேட்டர்ஸ் உள்ளிட்ட கருப்பின அமைப்புகள் இந்த போராட்டம் மூலமாக பிரபலமடையத் தொடங்கின. இதனையடுத்து கருப்பின மக்கள் அமெரிக்க போலீசாரால் துன்புறுத்தலுக்கு ஆளானதால் கருப்பின அமைப்புகள் சமூக வலைதளங்களில் குரல் கொடுக்க தொடங்கியுள்ளன.
இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் ரோச்சஸ்டர் மாகாணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை காவலர்கள் தங்கள் காருக்குள் ஏற்ற முற்பட்டனர். அப்போது சிறுமி கட்டுக்கடங்காமல் திமிரி போலீசாரை தாக்கியதால் அவரை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே எனப்படும் காரத்தன்மை கொண்ட ஸ்பிரேயை சிறுமியின் முகத்தில் அடித்தனர்.
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கைது செய்த வெள்ளையின காவலரான அன்ரே ஆண்டர்சன் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து விவரித்த அவர், சிறுமி தங்களைத் தாக்கியதால் அவரை பத்திரமாக அழைத்துச்செல்ல தாங்கள் பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியதாகவும் கருப்பின சிறுமி என்று பாகுபாடு காட்டுவதற்காக தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.