பதவி விலகுகிறார் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
உலகின் மிகப்பெரிய பன்னாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், 1994-ம் ஆண்டு ஜெப் பெசோசால் துவங்கப்பட்டது. மலிவான விலையில் புத்தகங்களை விற்பனை செய்வதற்கே இந்த நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் நாளடைவில் வளர்ச்சியடைந்து மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக முன்னேறியது.
நிறுவனத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, ஜெப் பெசோசின் சொத்து மதிப்பும் நாளுக்குநாள் கூடியது. இதன்மூலம் உலக பணக்காரர்களின் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்தார்.
இந்தநிலையில், அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார்.
மேலும் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அமேசான் வெப் சர்வீசஸின் தலைவராக இருக்கும் 52 வயதான ஆன்டி ஜெசி இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் இந்தாண்டு இறுதியில் நிகழும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜெப் பெசோஸ், அமேசான் ஊழியர்களுக்கு அனுப்பிய இ-மெயிலில், ‘‘அமேசானின் நிர்வாகத் தலைவராக முக்கிய நடவடிக்கைகளில் அங்கம் வகிப்பேன். இது தவிர டே ஒன் பண்ட், தி பெசோஸ் எர்த் பண்ட், புளூ ஆரிஜின், தி வாஷிங்டன் போஸ்ட் என எனக்கு பிடித்த சில விஷயங்களிலும் ஈடுபட வேண்டியுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில் ‘‘புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஆன்டி ஜெசியை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆன்டி ஜெசி நிறுவனத்துக்குள் நன்கு அறியப்பட்டவர். அவர் ஒரு சிறந்த தலைவராக இருப்பார். அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது’’ என்றும் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.