அமெரிக்க அதிபர் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை
ரஷ்யாவுடனான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை குறித்து பேசிய ஜோ பைடன் ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள அந்த நாட்டின் மீது அதிக அழுத்தம் கொடுக்க அமெரிக்கா தயங்காது என எச்சரித்தார். மேலும் சிறை வைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதுபற்றி பேசுகையில் ‘‘ரஷிய அதிபர் புதினுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருந்த அமெரிக்காவின் நாட்கள் முடிந்துவிட்டன. முந்தைய ஜனாதிபதியிடமிருந்து மிகவும் மாறுபட்ட அணுகுமுறையை நீங்கள் என்னிடம் பார்ப்பீர்கள். எங்களது முக்கிய நலன்களையும் எங்களது மக்களையும் பாதுகாக்க ரஷ்யா மீது அதிக அழுத்தம் கொடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்’’ என்றார்.
மேலும் ‘‘அரசியல் ரீதியாக அலெக்சி நவால்னியை சிறை வைத்தது, கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டங்களை நசுக்குவதற்கான ரஷ்யாவின் முயற்சிகள் அமெரிக்காவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. எனவே நவால்னி, உடனடியாகவும் எந்த வித நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட வேண்டும்’’ எனவும் கூறினார்.