“மனு ஸ்மிருதி பற்றிய திருமாவளவன் பேச்சுரிமையில் தலையிட முடியாது” வழக்கை வாபஸ் பெற வலியுறுத்திய உயர்நீதிமன்றம்!!

“நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள்” என்று மனுதர்ம நூல் குறித்த திருமாவளவனுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!!
கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட காணொலி கருத்தரங்கில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மனுதர்ம நூலை மேற்கோள் காட்டி பெண்கள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், மனு ஸ்மிருதியை தடை செய்யக்கோரி திருமாவளவன் ஆர்பாட்டங்களையும் நடத்தினார்.
இந்நிலையில், தனது சொந்த அரசியல் லாபத்திற்காக இந்துக்களை அவமதித்ததுடன், சமூகத்தில் அசாதாரண சூழலை உருவாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்ததாகவும் அவர் மீது நாடாளுமன்ற செயலாளர் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கார்த்தி ராமலிங்கம் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அச்சமயம் உறுதிமொழியை மீறிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாடாளுமன்ற செயலாளருக்கு அக்டோபர் 27ம் தேதி மனு அளித்ததாகவும், அதனை பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மனுதர்ம நூல் குறித்து திருமாவளவன் தன்னுடைய விளக்கத்தை அளித்தார்.
இதையடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதிகள், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி திருமாவளவனுடைய பேச்சுரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை பயன்படுத்தக்கூடாது. மனு ஸ்மிருதி குறித்து திருமாவளவன் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்; அது அவருடைய பேச்சுரிமை. பேச்சுரிமை அளவுக்கு அதிகமாக மீறும் போது அது தொடர்பாக தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, நீதிமன்றம் தலையிட முடியாது.
எனவே இந்த வழக்கினை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் வழக்கினை தள்ளுபடி செய்வோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மனுதர்ம நூல் குறித்த திருமாவளவனுக்கு எதிரான மனு திரும்பப் பெறப்பட்டது.