விலை குறையும் கச்சா எண்ணெய்.. அதிகரிக்கும் பெட்ரோல் விலை..? அரசியல் தலைவர்கள் கண்டனம்..
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயித்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயை விலைக்கேற்ப விலை மாற்றம் செய்யப்படுகிறது.
கடந்த மாதம் வரை விலையில் மாற்றம் இல்லாமல் நிலையாக இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக உள்ளது.
தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் எரி பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் லிட்டர் 90 ரூபாயை நெருங்குகிறது. டீசல் விலையும் 83 ரூபாயை நெருங்குகிறது.
சென்னையில் பெட்ரோல் இன்று லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.89.70 ஆகவும், டீசல் 33 காசுகள் அதிகரித்து ரூ.82.66 ஆகவும் விற்கப்படுகிறது. தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 56 டாலராக குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை ரூ.90, டீசல் விலை ரூ.83-க்கும் விற்கப்படுகிறது. மேலும் சமையல் கியாஸ் விலையும் இதுவரையில் ரூ.300-க்கும் மேல் உயர்த்தப்பட்டன. மானியமும் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். இந்த விலை உயர்வுக்கு எதிராக ஆங்காங்கே கிளர்ச்சி இயக்கங்கள் நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.