சீன அதிபரை தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..
சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கை, முதல் முறையாக டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள், ஹாங்காங்கில் அத்துமீறல், மனித உரிமைகள் மீறல் போன்ற செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்த போது, அமெரிக்க – சீன உறவில் பெரும் சரிவு ஏற்பட்டது. சீனா மீது, டிரம்ப் பல பொருளாதார தடைகளை விதித்தார். இதையடுத்து, அமெரிக்கா – சீனா இடையே, வர்த்தக போர் தீவிரமடைந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின், 46வது அதிபராக ஜோ பைடன், கடந்த மாதம், 20ல் பதவியேற்றார். நேற்று, அவர், சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கை, டெலிபோனில் தொடர்பு கொண்டு, முதல் முறையாக பேசினார். அதன் விபரங்களை, அவர், ‘டுவிட்டரில்’ பதிவிட்டுள்ளார். அதன் விபரம்:
சீன மக்கள், 12ம் தேதி புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இதையொட்டி, சீன அதிபரை டெலிபோனில் தொடர்பு கொண்டு, சீன மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். அதேநேரத்தில் சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், ஹாங்காங்கில் அத்துமீறல், தைவானை மிரட்டுதல் உள்ளிட்ட பல செயல்பாடுகளுக்கு, கடும் கண்டனத்தையும் தெரிவித்தேன்.
எனினும், அமெரிக்க மக்களின் நலனுக்காக, சீனாவுடன் இணைந்து பணியாற்ற தயார் என, ஜிங்பிங்கிடம் தெரிவித்தேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.