முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்த நபர் கைது.. விசாரணையில் பரபரப்பு தகவல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்மநபர் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
விசாரணையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இருந்து மிரட்டல் வந்தது தெரியவந்தது. சேகர் என்பவரது போனில் இருந்து மிரட்டல் வந்ததால், அவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவரது செல்போனை, உடன் பணியாற்றிய திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த அன்பு (எ) அன்பழகன்(47) எடுத்துச் சென்று, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிந்தது. நேற்று காலை, கோவை அருகே கருமத்தம்பட்டியில் அன்பழகனை போலீசார் மடக்கினர்.
பின்னர், அவரை கைது செய்து, பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவர், விவசாயிகளின் கடனை மட்டும் முதல்வர் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். அதேபோல், நெசவாளர்கள் வங்கிகளில் வாங்கியுள்ள கடனையும், தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.