போராட்டத்தில் ஈடுபட்டவர்களை “நாய்கள்” எனக்கூறி சர்ச்சையில் சிக்கிய தெலுங்கானா முதல்வர்..?

ஐதராபாத், தெலங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் நாய்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நாகர்ஜூன சாகர் திட்டத்திற்கு முதல்வர் சந்திரசேகர ராவ் அடிக்கல் நாட்டினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றத் தொடங்கும்போது, பெண்கள் உள்பட குழுவாக வந்திருந்த மக்கள் முதல்வரிடம் கோரிக்கை மனுக்கொடுக்க முயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அவர், போராட்டத்தில் ஈடுபடாமல் இங்கிருந்து செல்லுங்கள். இங்கு இருக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால், அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். முட்டாள்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். தேவையின்றி காவல்துறையால் விரட்டப்படும் சூழலை உருவாக்க வேண்டாம்.
உங்களைப் போன்று பலதரப்பட்ட நாய்களை நாங்கள் சந்தித்துள்ளோம் என்று கூறினார். பொது நிகழ்ச்சியில் முதல்வரின் இத்தகைய பேச்சுக்கு விமர்சனங்கள் எழுந்தன.
தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான மாணிக்கம் தாக்கூர் பொதுமக்களிடம் சந்திரசேகர ராவ் மன்னிப்புக் கோரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நாகர்ஜூன சாகர் பொதுநிகழச்சியில் கலந்துகொண்ட கூட்டத்தில் பெண்களும் இருந்தனர். இது ஜனநாயக நாடு என்பதை மறந்துவிட வேண்டாம். ஒரு காரணத்தை வலியுறுத்தி அவர்கள் அங்கு குழுமியிருந்தனர். நீங்கள் முதல்வராக இருக்கிறீர்கள். அவர்களே நமக்கு அதிகாரம் வழங்கியவர்கள். அவர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று தெரிவித்தார்.