” தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்தது நட்டு வைத்த ஒரு செங்கல் மட்டுமே..” – விளாசிய எம்.பி ஜோதிமணி

மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து வரும் மத்திய அரசு, இந்த ஆண்டும் தமிழகத்தை புறக்கணித்திருக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார்.

பட்ஜெட் பற்றிய விவாதத்தில் பேசிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் “மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து வரும் மத்திய அரசு, சட்டமன்ற தேர்தல் நடக்கும் இந்த ஆண்டாவது ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என நம்பினோம். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்துக்கு கிடைத்தது ஒரே ஒரு திருக்குறள் மட்டும்தான். 1 இலட்சத்து 3 ஆயிரம் கோடி மதிப்பில் தமிழகத்தில் சாலை வசதிகளை ஏற்படுத்துவோம் என மத்திய அரசு தற்போதைய பட்ஜெட்டில் தெரிவித்திருக்கிறது, ஆனால் மதுரையில் ஒரே ஒரு செங்கல்லை நட்டுவிட்டு அதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று தமிழக மக்களிடம் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்துவோம் என்று சொன்னீர்கள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என சொன்னீர்கள், பெண்களை அதிகாரப்படுத்துவோம் என சொன்னீர்கள் இதையெல்லாம் மத்திய அரசு செய்ததா?

இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வேலைவாய்ப்பின்மை உருவாகியுள்ளது, அவர்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை என்ன திட்டம் அறிவித்தது. நாட்டுக்கே உணவளித்து துயரில் சிக்கியிருக்கும் விவசாயிகளின் விவசாயக்கடனை ரத்து செய்ய மனமில்லாத மத்திய அரசு, அம்பானி-அதானி போன்ற பணக்காரர்களுக்கு 1.50 ஆயிரம் கோடியை கொட்டிக்கொடுக்கிறீர்கள். பெண்கள் பாதுகாப்புக்காக எந்த திட்டமும், பெண்ணால் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

பெட்ரோல், டீசல் வரிவிதிப்பின் மூலமாக மட்டும் 20 இலட்சம் கோடியை மத்திய அரசு ஈட்டியுள்ளது, ஆனால் எங்கே போனது அந்த பணம்?. கல்வி, மருத்துவம், விவசாயம், ராணுவத்திற்கு இந்த பட்ஜெட் கூடுதல் நிதி ஒதுக்கவில்லை, குறிப்பாக பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு 4 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டது. கொரோனா காலத்தில்கூட மக்களுக்கு நல்லது செய்ய இந்த அரசுக்கு மனம் இல்லை.

கொரோனா காலத்துக் குடும்பத்துக்கு 500 ரூபாய் கொடுத்ததை பெருமையாக சொல்கிறீர்கள், நாங்கள் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறோம் உங்களால் வாழ்ந்துகாட்ட முடியுமா?. தமிழக அரசின் கடன்சுமை 4,56,660 கோடியாக உயர்ந்துள்ளது, இதுதான் உங்களுக்கு கைகட்டி சேவகம் செய்யும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனை. மாநில அரசின் இந்த சுமையை குறைக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழகத்தின் ஜி.எஸ்.டி பங்கான 15,475 கோடியைக்கூட கொடுக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. இந்த உரிமையைக்கூட கேட்காத அதிமுகவையும், பாஜகவையும் தமிழக மக்கள் வரும் தேர்தலில் தோற்கடிப்பார்கள்” என தெரிவித்தார்  

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x