கேரளாவில் 180 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா..?

கேரளாவின் மலப்புரம் பகுதியில் மட்டும் 180 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5471 என்று மாநில சுகாதாரதுறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இதில் மலப்புரம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மலப்புரம் மாவட்டம் பொன்னாணி பகுதியில் சுகாதார துறையினர் கடந்த 2 நாட்களாக ஆய்வில் ஈடுபட்டனர். மேலும் அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளி, உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன் முடிவுகள் நேற்று மாலை தெரியவந்தது. இதில் மலப்புரம் பகுதியில் மட்டும் 180 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மலப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க சுகாதாரதுறை ஏற்பாடு செய்துள்ளது. அதிக நோயாளிகள் கண்டறியப்பட்ட பொன்னாணி தாலுகா பகுதியில் சுகாதார துறையினர் முகாமிட்டு உள்ளனர்.
அவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளான மாணவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.