“நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம்” சட்டப் பேரவையில் சீறிய முதல்வர் பழனிசாமி!

நீட் தேர்வினால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக தான் முழு காரணம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இரண்டாவது நாளாக நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டில் அனைத்து துறைகளையும் இணைத்து முதலமைச்சர் உதவி மையம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையின் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
மேலும், குறைதீர்ப்பு மேலாண்மையை ஒருங்கிணைக்க ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மையம் அமைக்க ரூபாய் 12.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மையத்தின் மூலம் ஒரே இடத்தில் மனுக்கள் பெற்று குறைகளைத் தீர்க்க முடியும். என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், “திமுக என்றும் நீட் விவகாரத்தில் எதிராகத்தான் உள்ளது. கலைஞர் ஆட்சியின் போது நீட்தேர்வு நடைபெறவில்லை. நீட் தேர்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று பேசியுள்ளார்.
முக ஸ்டாலின் உரைக்கு பதிலளித்த தமிழக முதல்வர், “நீட் தேர்வினால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக தான் காரணம். நீட் எப்போது வந்தது? யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது இந்த உலகத்துக்கே தெரியும். கடந்த 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் – திமுக மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் மறந்திட வேண்டாம். நீட் தேர்வு கொண்டு வந்தபோது காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்ததா, இல்லையா? நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் ஆஜரானது உண்மையா, இல்லையா? ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை மீண்டும் கொண்டு வந்து திமுக வரலாற்று பிழையை செய்துள்ளது.” என்று ஆவேசமாக உரையாற்றியுள்ளார்.
இதனிடையே, பேரவையில் அமளியில் ஈடுப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவை காவலர்களால் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.