அதிகரித்துக் கொண்டே செல்லும் லஞ்ச பொறியாளரின் சொத்து பட்டியல்.. மனைவி லாக்கரில் 50 பவுன் தங்க காசு!!

லஞ்ச புகாரில் சிக்கிய வேலுார், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், மனைவியின் வங்கி லாக்கரில் இருந்து, 50 சவரன் தங்க காசுகள் கைப்பற்றப்பட்டன.
வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றியவர், பன்னீர்செல்வம், 51; புகாரின்படி, வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், கடந்த, 13ல் அவரது இரு வீடுகளில் இருந்து, 3.98 கோடி ரூபாய், 3.6 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள, 90 சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.
பன்னீர்செல்வம், அவரது மனைவி புஷ்பா ஆகியோர் பெயர்களில், 20 வங்கி கணக்குகள், 20 லாக்கர்கள் உள்ளன. இதை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ராணிப்பேட்டையில் உள்ள ஸ்டேட் வங்கியில், அவரது மனைவி புஷ்பா பெயரிலுள்ள லாக்கரை நேற்று ஆய்வு செய்ததில், மொத்தம், 50 சவரன் தங்க காசுகள் இருந்தன. இதை அதிகாரிகள் கைப்பற்றினர்.
விசாரணையில், பணத்துக்கு பதிலாக தங்க காசுகளை, பன்னீர்செல்வம் லஞ்சமாக வாங்கியது தெரிந்தது.இது குறித்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ‘பன்னீர்செல்வத்திடம் நாள்தோறும் விசாரணை நடக்கிறது. இதனால் அவரது, சொத்து பட்டியல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது’ என்றனர்.