“வாட்ஸ் அப்” தனி நபர் விவரங்களை பாதுகாப்பதில் பாரபட்சம்; உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

வாட்ஸ் அப் நிறுவனம் பயனாளிகளின் தனி நபர் விவரங்களை பாதுகாப்பதில் பாரபட்சமாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தியாவில் தனிநபர் விவரங்களைப் பாதுகாப்பதில் உரிய வழிமுறைகளை கடை்பிடிக்காதது ஏன் என்று விளக்கம் கோரி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கு விரோதமாக பயனாளிகளின் தகவல்கள் லாப நோக்கத்திற்கு பகிரப்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசுக்கும், நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

பயனாளிகள் தகவல்களை பாதுகாப்பதில் இந்தியாவில் குறைவான தர நிர்ணயத்தை கடைபிடிப்பது தொடர்பாக எழுந்துள்ள புகார் மீது மத்திய அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது என்று விவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் 3 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான நிறுவனமாக இருக்கலாம். ஆனால் தனிமனிதர்கள் சார்ந்த விவரம் அதைவிட மதிப்பு மிக்கது. அதை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களைப் பற்றிய தகவல் பலருக்கு பகிரப்பட்டுள்ளதோ என்ற அச்சத்தோடு உள்ளனர். அவர்களைப் பற்றிய தகவல் விவரம் மற்றும் அவர்கள் பகிர்ந்துகொள்ளும் உரையாடல் விவரங்களும் பிறருக்கு பகிரப்பட்டதோ என்ற அச்ச உணர்வு மேலோங்கியிருப்பதாக, நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அளித்த பதிலில், நிறுவனங்கள் பயனாளிகளின் தகவல்களை பிறருக்கு பகிரக்கூடாது. தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனமும் அதன் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனமும் தகவல் பகிரப்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளன. இந்தியாவில் பின்பற்றப்படும் அதே தகவல் பாதுகாப்பு விதிமுறைகளைத்தான் ஐரோப்பிய நாடுகள் தவிர பிற நாடுகளில் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளன. ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் இது தொடர்பான சிறப்பு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் உள்ளது என தெரிவித்துள்ளன.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதியிலிருந்து தனிநபர் தகவல்கள் பிற நிறுவனங்களுக்கு பகிரப்படுவது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கர்மன்ய சிங் மற்றும் ஷ்ரேயா சேத்தி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் எவ்வித வழிகாட்டு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

இதையடுத்தே இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்விதம் தனிநபர் தகவல் திருட்டானது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 19 (தனி நபர் சுதந்திரம், பேச்சுரிமை), சட்ட விதி 21 (வாழ்வு சுதந்திரம்) ஆகியவற்றுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டது.

வாட்ஸ் அப் நிறுவனத்தின் தனி நபர் தகவல் பாதுகாப்பு விதிகள் குறித்து 2017-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருந்தது. தனி நபர் சுதந்திரத்தைவிட தனி நபர் தகவல் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டிருந்தது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x