போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை – மியான்மருக்கு ஐநா கண்டனம்
மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்டுள்ள அடக்குமுறைக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றது.
ஆனால், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறியுள்ள ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆங் சான் சூகி உள்பட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரான மாண்டலே, தலைநகா் நேபிடாவிலும் நடைபெற்ற போராட்டத்தைக் கலைக்க ராணுவத்தினர் பயன்படுத்திய ரப்பர் குண்டுகளால் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்புத் தூதர் கிறிஸ்டின் ஷ்ரானர் புர்கெனர் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டத்தை ஒடுக்க மியான்மர் ராணுவம் அடக்குமுறைகளை மேற்கொள்வதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும் எனவும் புர்கெனர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் மியான்மருக்கு ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.