டில்லி கலவரத்தில் போலீசார் பங்கு தொடர்பில் விசாரணை கோரி எதிர்கட்சிகள் மனு

‘டில்லி கலவரம் பற்றி போலீசார் நடத்தி வரும் விசாரணையில், எங்களுக்கு நம்பிக்கையில்லை. கலவரத்தில் போலீசார் பங்கு பற்றி விசாரிக்க, உத்தரவிட வேண்டும்’ என கோரி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் எதிர்க்கட்சிகள் மனு கொடுத்துள்ளன.
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பரில், பார்லிமென்டில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு, நாடு முழுதும், கடும் எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். டில்லியில், பிப்ரவரி, 23 முதல், 26ம் தேதி வரை நடந்த கலவரத்தில், 53 பேர் கொல்லப்பட்டனர்; 581 பேர் காயமடைந்தனர். இந்த கலவரம் பற்றி, டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கலவரம் தொடர்பாக, நீதிமன்றத்தில், போலீசார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், ‘கலவரத்தின் பின்னணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி, ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், பொருளாதார வல்லுனர் ஜெயதி கோஷ், டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வ நாத் ஆகியோர் இருந்துள்ளனர்’ என, கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, தி.மு.க., – எம்.பி., கனிமொழி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் ஷா ஆகியோர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருந்ததாவது:“டில்லி கலவரத்துக்கு பின்னால் இருக்கும் சதி திட்டம் குறித்து, விசாரிக்க வேண்டும். இந்தக் கலவரத்தில், போலீசாரின் பங்கு குறித்து, பல்வேறு கேள்விகள் எழுகின்றன. திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த வன்முறையில், அரசியல் கட்சித் தலைவர்கள், பொய்யான குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக வெளியாகியுள்ள, ‘வீடியோ’ பதிவுகள், புகைப்படங்களில், போலீசாரும் கற்களை வீச கும்பல்களுக்கு உத்தரவிட்டதும், அவர்களைத் துாண்டிவிட்டதும் தெரிய வந்துள்ளது.
இந்தக் கலவரத்தில், பா.ஜ., தலைவர்களுடன், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டுள்ளனர். கலவரத்தை துாண்டி விட்டது, பா.ஜ., தலைவர்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. சட்ட ஒழுங்கு மீது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டுமெனில், நம்பகத்தன்மையான, நடுநிலையான விசாரணை தேவை. இந்தக் கலவரம் தொடர்பாக, பதவியில் உள்ள, அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
