ஒரு கொரோனா தடுப்பூசியைக் கூட பெறாத 130 நாடுகள்: ஐ.நா. அதிருப்தி!
கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதில் சீரற்ற தன்மை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் அவை அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உலகின் 130 நாடுகள் இன்னும் ஒரே ஒரு கொரோனா தடுப்பூசியைக் கூடப் பெறவில்லையென ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது. உலகின் 10 நாடுகளில் மட்டும் 75 சதவீதமான கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தடுப்பூசி விநியோகத்தில் நியாயமான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இது நியாயமான நடவடிக்கை அல்ல. அனைவரும் பாதுகாப்பான நிலையை அடையாதபட்சத்தில், நம்மில் எவரும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாக இருக்க முடியாது எனக் குடரெஸ் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி உற்பத்தி, நிபுணத்துவம் மற்றும் விநியோகத்தை ஒன்றிணைக்க உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை உருவாக்க வேண்டும் எனக் கோரிய அவர் அதனைச் செயல்படுத்துவதற்கும் நிதியளிப்பதற்கும் அவசர பணிக்குழு உருவாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.