போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை கைது செய்த போலீசார்..

கரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு அந்த சிலை அகற்றப்பட்டு வேறு காந்தி சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை வைப்பதற்கான பீடத்தின் கட்டுமானப்பணிகள் தரமற்ற நிலையில் உள்ளதாகவும் முறையான கட்டுமானப்பணிகளை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி எம்.பி. ஜோதிமணி தலைமையிலான 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தக்கூடாது எனவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் உடனே கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என ஜோதிமணி சொன்னார். இதனால் ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸாரை கைது செய்தனர்.

பின்னர் பேசிய ஜோதிமணி “இந்த அரசு எம்.பி. மீது கைவிக்கவில்லை. தமிழகத்தின் ஒரு பெண் மீது கை வைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.