குழந்தையின் மூக்கில் உடைந்த கொரோனா குச்சி – சவூதியில் சோகம்!

கொரோனா பரிசோதனையின் போது, குழந்தையின் மூக்கினுள் உடைந்து சிக்கியதால் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.
சவூதி அரேபியாவில் அப்துல்லா அல் ஜவுபான் என்பவரது ஒன்றரை வயது ஆண் குழந்தை, காய்ச்சல் காரணமாக அங்குள்ள பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் எனப்படும் நீளமான மெல்லிய குச்சியை மூக்கினுள் விட்டபோது அது உடைந்துள்ளது.
குச்சியை எடுக்க டாக்டர்கள் மயக்க மருந்து செலுத்தினர். ஆனால் குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, குழந்தை சுயநினைவை இழந்தது. ஆபரேஷன் செய்து, ஸ்வாப்பை வெளியே எடுத்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தைகள் சிறப்பு மருத்துவர் மூலம், ‘எல்லாம் நார்மலாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் ’ என்று அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். ஆனால், சிறப்பு டாக்டர் விடுப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதை உணர்ந்த அப்துல்லா, குழந்தையை வேறு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கோரியுள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்குள் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை உயிரிழந்தது தொடர்பாக, நிலைமையை தவறாக கையாண்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள குழந்தையின் உறவினர்,‘ குழந்தைக்கு சாதாரண காய்ச்சல் தான் இருந்தது. மூச்சுத்திணறலோ, வேறு ஆபத்தான நிலையோ இல்லை. ஆனால், தேவையின்றி கொரோனா டெஸ்ட் எடுத்து, உயிரை பறித்துவிட்டனர்.’ என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.