தடுப்பூசி போட்டுக்கணும்.. இல்லைனா செலவை ஏத்துக்கணும் – எச்சரிக்கும் பஞ்சாப் அரசு

தடுப்பூசியை தவிர்க்கும் சுகாதார பணியாளர்கள், தொற்றுக்கு ஆளானால் சிகிச்சைக்காக உதவி பெற முடியாது, தனிமைப்படுத்திக்கொள்ள அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படாது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜன., 16 முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறையாக கொரோனா தடுப்பு மருந்து போடப்படுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 240 புதிய வகைகள் உள்ளதாக மஹா., கொரொனா டாஸ்க் போர்ஸின் உறுப்பினர் மருத்துவர் சஷாங் ஜோஷி தெரிவித்துள்ளார். அதனால் பெரிய கூட்டத்திடம் மொத்தமாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொரோனாவை செயலிழக்க செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக 3 கோடி மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், போலீஸ், ராணுவத்தினர் போன்றோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார பணியாளர்களே தயங்குகின்றனர். இதனால் பஞ்சாப் அரசு ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு சிறிது நாட்கள் கழித்து நோய் தொற்று ஏற்பட்டால் விடுமுறை கிடையாது, மொத்த மருத்துவ செலவையும் அவர்களே ஏற்க நேரிடும் என கூறியுள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பிர் சித்து கூறியதாவது: 2.06 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 1.82 லட்சம் முன்களப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்திருந்தனர். சுமார் 79,000 சுகாதாரப் பணியாளர்கள், 4,000 முன்களப் பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது, பயனுள்ளது. பஞ்சாபில் யாருக்கும் எந்தவொரு மோசமான பக்கவிளைவோ, இறப்போ ஏற்படவில்லை. வதந்திகள், தவறான தகவல்களால் யாரும் பாதிக்கப்படக்கூடாது.
கொரோனா இன்னும் முடிவடையவில்லை. பஞ்சாபில் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. இரண்டாவது அலைக்கு போராட தயாராக வேண்டும். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஒருவேளை பின்னர் அவர்கள் தொற்றுநோயைப் பெற்றால், சிகிச்சை செலவை அவர்கள் ஏற்க வேண்டியிருக்கும். தனிமைப்படுத்தலுக்காக அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படாது. என கூறியுள்ளார்.