60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசி..

மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் பேசிய அமைச்சர், 2ஆம் கட்ட தடுப்பூசி பணிகள் நாடெங்கும் வரும் 1ஆம் தேதி முதல் தொடங்குவதாக தெரிவித்தார்.
முதல் கட்டத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு ஊசி போடப்பட்ட நிலையில் 2ஆவது கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் ஊசி போடப்படும் என ஜவடேகர் தெரிவித்தார்.
தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும் அதற்கான கட்டணம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.