சமையல் கியாஸ் விலை மீண்டும் உயர்வு… பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

தற்போது சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 785 – லிருந்து ரூ. 810 ஆக அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 3-வது முறையாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 4ம்தேதி வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லாத சிலிண்டர் (Non-subsidized cylinder) விலை ரூ.25 விலை அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் மானியமில்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.735 ஆக உயர்ந்தது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி 14ம் தேதி சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் அதன் விலை 785 ரூபாய் ஆக உயர்ந்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் 3ஆவது முறையாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயில் இருந்து 810 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலையும் கடுமையாக உயர்வதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் பொதுமக்களின் அன்றாட அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் மீண்டும் உயர்த்தப்படுவது பொதுமக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.