நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாகச் சி. பி. ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வீடியோ கான்பரன்சிங் முறையில் நிரவ் மோடி ஆஜரானார். இந்த வழக்கில், பலமுறை முயன்றும் இங்கிலாந்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை.
இந்நிலையில், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், மாவட்ட நீதிபதி சாமுவேல் கூசி, நீரவ் மோடியை இந்தியாவுக்கு ஒப்படைக்குமாறு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பது மனித உரிமைகளுக்கு இணங்குவதாக நான் திருப்தி அடைகிறேன். ஒப்படைக்கப்பட்டால் நிரவ் மோடிக்கு நீதி கிடைக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்திய அரசாங்கத்தின் சமர்ப்பிப்புகளுக்கு உடன்பட்டது. தொற்று மற்றும் இந்திய சிறை நிலைமைகளின்போது அவரது மனநலம் மோசமடைந்தது போன்ற வாதங்களைத் தள்ளுபடி செய்கிறேன். எனவே, லண்டனில் உள்ள தொழிலதிபர் நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடுகிறேன் என்றும் அதிரடி தீர்ப்பு அளித்தார்.
மும்பை ஆர்தர் சாலை சிறையில் போதுமான மருத்துவ வசதி இருப்பதால் நிரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பினால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து இல்லை. நிரவ் மோடிக்கு மும்பை ஆர்தர் சாலை சிறையில் போதுமான மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல பராமரிப்பு வழங்கப்படும் என்று இங்கிலாந்து நீதிபதி கூறினார்.
வழக்கு விசாரணையின்போது, 49 வயதான நிரவ் மோடி, வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தென்மேற்கு லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜரானார்.