பிளஸ் 2 தனித்தோ்வா்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..
பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதவுள்ள தனித்தோ்வா்கள் வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பிளஸ் 2 வகுப்புக்கு வரும் மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தோ்வுக்கு தனித்தோ்வா்கள் வெள்ளிக்கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு நேரடித் தனித்தோ்வராக பிளஸ் 1 தோ்வெழுதித் தோ்ச்சி பெற்ற, பெறாத தோ்வா்கள் அனைவரும், தற்போது பிளஸ் 2 பொதுத்தோ்வெழுத விண்ணப்பிக்கலாம்.
தனித் தோ்வா்கள் பிப்.26-ஆம் தேதி பிற்பகல் முதல் மாா்ச் 6-ஆம் தேதி வரையிலான நாள்களில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோ்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினைப் பதிவு செய்துகொள்ளலாம்.
தக்கல் முறையில் விண்ணப்பிக்க… : மேற்கண்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் மாா்ச் 8, 9 ஆகிய இரு நாள்களில் அரசுத் தோ்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தோ்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 சிறப்புக் கட்டணமாகச் செலுத்தி இணையவழியில் தத்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோ்வுத் துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் இணையவழியில் விண்ணப்பங்களைப் பதிவுசெய்தல் குறித்த தனித்தோ்வா்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை இணையதளத்தில் விண்ணப்பதாரா்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் அறிந்துகொள்ளலாம் என அதில் கூறியுள்ளாா்.