‘மலேஷிய மணலை மலிவாக கொடுங்கள்’ மணல் லாரி உரிமையாளர்கள் புலம்பல்

‘மலேஷியா மணலை, நியாயமான விலையில் விற்பனை செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.
இதுதொடர்பாக, சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், யுவராஜ் விடுத்துள்ள அறிக்கை: “மலேஷியா மணல், ஆந்திராவில் டன், 1,500 ரூபாய்; கர்நாடகாவில், 1,650 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும், 2,500 ரூபாய்க்கு விற்பது ஏன் என புரியவில்லை.
‘டெண்டர்’ வாயிலாக, வெளிநாட்டு மணலை விற்பதற்கு தனியாருக்கு உரிமம் வழங்கினால், போட்டி காரணமாக, மணல் மலிவான விலையில் கிடைக்கும். முடங்கிய கட்டுமான பணிகளும் வேகம் எடுக்கும். கடந்தாண்டில், 2 யூனிட் மணல், 20 ஆயிரத்து, 26 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, 21 ஆயிரத்து, 350 ரூபாய்க்கு மணல் விலை நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. அதாவது, 1,350 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
வீடு தேடி மணல் வரும் என்று அரசு கூறியிருந்தது. ஆனால், திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு, இதுவரை வெளிநாட்டு மணல் செல்லவில்லை. அதிக விலை காரணமாக, மலேஷியா மணலை வாங்க, யாரும் முன்வரவில்லை. எனவே, முதல்வர் பழனிச்சாமி தலையிட்டு, நியாயமான விலையில் மலேஷியா மணல் விற்பனை செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு, யுவராஜ் கூறியுள்ளார்.