ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது – கேரள அரசு அறிவிப்பு

கேரள மாநிலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது எனும் அறிவிப்பை மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
கணினிகள், செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தி சூதாட்டம் ஆடுதல் போன்ற சம்பவங்கள் அண்மைக் காலமாக பன்மடங்கு பெருகியுள்ளன. இதனால் அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனா். தற்கொலை சம்பவங்களும் பதிவாகின்றன.
இத்தகைய தற்கொலை சம்பவங்களைத் தடுப்பதற்கும், இணையவழி சூதாட்டத்தின் மூலம் இணையவெளியில் பந்தயம் கட்டுதல், பணம் வைப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது எனும் அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. கேரள விளையாட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைகோரிய மனு மீதான விசாரணையில் இத்தகைய விளையாட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.