அது ஒரு அழகிய கனா காலம்.. திரும்பி வந்தது.. திறந்தவெளி பள்ளிகள்!!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு, போஸ்னியா நாட்டில் திறந்தவெளி வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றால் கடந்த 6 மாதங்களாக உலகமே முடங்கிக் கிடக்கிறது. ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தான் கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்துள்ளது.
இருப்பினும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறப்பதில், பல நாடுகளில் இன்னமும் சாத்தியமில்லாத சூழல் தான் நிலவுகிறது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில் போஸ்னியா நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் திறந்தவெளி வகுப்பறைகள் அமைத்து மாணவர்களுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்துள்ளனர். என்னதான் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தாலும், கொரோனா பிரச்சினையால் மாணவர்களின் பள்ளிப் பருவம் கெட்டு விடக் கூடாது என, அங்குள்ள ககுனி எனும் கிராமத்தில் ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து இந்த வகுப்பறையை அமைத்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த காலத்தை பயன்படுத்தி, தாங்களாகவே நிதி திரட்டி இந்த வகுப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள் அப்பள்ளி ஆசிரியர்கள். சுமார் 1000 பேர் படிக்கும் அந்தப் பள்ளியில், வெளிப்புறத்தில் மரத்தினால் செய்யப்பட்ட மேஜைகள் செய்யப்பட்டு மாணவர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சுவர்களில் கரும் பலகைகள் அமைத்து ஆசிரியர்கள் வகுப்பெடுக்கின்றனர். மாணவர்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியுடன் அமர்வது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. வானிலை ஒத்துழைக்கும் வரை இந்த வகுப்புகள் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவதால் மாணவர்களும் உற்சாகமடைந்துள்ளனர். அதுவும் திறந்தவெளியில் பாடம் கற்பது தங்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தருவதாக அம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழல் அவர்களுக்கு மன மகிழ்வை தருகின்றன என்கிறார்கள் ஆசிரியர்கள்.