தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த 2 வாரமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் (வியாழக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
அதாவது, தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, சேலம், நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கயத்தாறு 7 செ.மீ., வனமாதேவி 5 செ.மீ., சோழவந்தான், வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி, திருக்கழுக்குன்றம், பஞ்சம்பட்டி, ததையங்கர்பேட்டை தலா 4 செ.மீ., வந்தவாசி, உசிலம்பட்டி, கமுதி, ஸ்ரீபெரும்புதூர், முதுகுளத்தூர், குறிஞ்சிப்பாடி, குப்பனம்பட்டி, கடம்பூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.