முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்..

அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக, பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். மாதம், 1 ரூபாய் கவுரவ சம்பளத்தில், கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் கூடியது இந்த பதவி.
பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. கடந்த, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சிக்கு, அரசியல் வியூகங்களை வகுத்து தரும் பணியை, பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு, இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், முதல்வரின் முதன்மைச் செயலராக, பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இதை, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமரீந்தர் சிங் தெரிவித்து உள்ளார்.
‘கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் கூடியது இந்தப் பதவி. அவருக்கு தனியாக வாகனம், அலுவலகம், ஊழியர்கள், பயணப் படி ஆகியவை உண்டு. கவுரவ மாத சம்பளமாக, 1 ரூபாய் வழங்கப்படும்’ என, அவருக்கான பணி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலை சந்திக்கும், மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., கட்சிக்கு, தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார். அதேபோல், தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க.,வுக்கும் அரசியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ‘பஞ்சாப் மக்களின் நலனுக்காக, பிரசாந்த் கிஷோருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளேன்’ என, தன் செய்தியில், அமரீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.