பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்.. மகன் நாடகமாடியது அம்பலம்..
மேற்கு வங்கத்தில் 85 வயது மூதாட்டி தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக, ‘அவரது மகனே பல மாதங்களாகத் தாயை தாக்கி துன்புறுத்தினார்’ என்று உறவினர் ஒருவர் கூறியுள்ளளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வயதான 85 வயதான ஷோவா மஜும்தார் என்பவரும் அவரது மகன் கோபால் மஜும்தார் என்பவரும் தாங்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
முகமூடி அணிந்த மூன்று நபர்கள் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்தது தாக்குதல் நடத்தியாக கோபால் மஜும்தார் கூறினார். தாக்குதல் நடத்தியது யார் என சரியாக அடையாளம் காண முடியவில்லை என்றும் இருப்பினும், அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கோபால் மஜும்தார் கூறினார். ஏனெனில் தாக்குதல் நடத்தும்போது, ‘நீ எதற்கு பாஜகவில் இருக்கிறாய்’ என்று அவர்கள் திட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து 85 வயதாகும் ஷோவா மஜும்தார் கூறுகையில், “எனது மகன் பாஜக நிர்வாகியாக இருப்பதால் தாக்கப்பட்டுள்ளார். இரண்டு நபர்கள் என்னையும் தாக்கினர். என் மகனின் தலை மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனது உடல்நிலையும் சரியில்லை. இந்தத் தாக்குதல் காரணமாக என்னால் சரியாகப் பேசவோ உட்காரவோ முடியவில்லை. நான் படுக்கையிலிருந்தபோதே தாக்கப்பட்டேன்”என்று அவர் கூறினார்.
85 வயது மூதாட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மீடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் புதிய திருப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குடும்ப பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததாகவும் பல மாதங்களாகவே மூதாட்டியை அவரது மகன் தொடர்ந்து தாக்கி வருவதாகவும் 85 வயதாகும் ஷோவா மஜும்தாரின் பேரன் கோபிண்டோ தெரிவித்துள்ளார். இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னால் பாஜக இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்தார். மேலும், ஷோவா மஜும்தார் தங்கள் வீட்டிற்கு வந்து மகன் தன்னை அடித்துத் துன்புறுத்துவது குறித்துப் புலம்புவார் என்றும் கோபிண்டோவின் மனைவி பிரமிதா மஜும்தர் தெரிவித்தார்.