“பா.ஜ.வை வீழ்த்த பிரசாரம்” – விவசாய சங்க தலைவர்கள் அறிவிப்பு
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகள் சங்க தலைவர்கள் குழு, 5 மாநில தேர்தலில் பாஜ கூட்டணியை வீழ்த்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளிடம் பிரசாரம் செய்ய வர இருப்பதாக அறிவித்துள்ளது. மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 3 மாதமாக போராடி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் வரும் 6ம் தேதியோடு 100வது நாளை எட்டுகிறது.
இதையொட்டி, டெல்லி எல்லை ஒட்டி அமைந்துள்ள கேஎம்பி எக்ஸ்பிரஸ் சாலையை முடக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். 6ம் தேதி காலை 11 மணி முதல் 5 மணி நேரத்திற்கு பல இடங்களில் சாலை முடக்கப்படும் என சம்யுக்த் கிசான் மோர்சா சங்க தலைவர் யோகேந்திர யாதவ் நேற்று தெரிவித்தார். மேலும் வரும் 12ம் தேதி கொல்கத்தாவில் விவசாய சங்க தலைவர்கள் இணைந்து பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர்.
மற்றொரு விவசாய சங்க தலைவர் பல்பிர் சிங் கூறுகையில், ‘‘தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலத்திற்கும் விவசாய சங்க தலைவர்கள் குழு பயணம் செய்ய உள்ளனர். அவர்கள் அங்குள்ள விவசாயிகளிடம் பாஜவை வீழ்த்த பிரசாரம் செய்வார்கள். எந்த கட்சிக்கும் நாங்கள் வாக்கு சேகரிக்க மாட்டோம். விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க தவறியதால் பாஜ.வை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். எனவே, பாஜ.வை எந்த வேட்பாளர் வெல்வாரோ, அவருக்கு வாக்களிக்கும்படி விவசாயிகளிடம் வலியுறுத்துவோம்’’ என்றார்.